அரக்கர் படை விடஅனுமன் கடும் போர் செய்தல்

5571.

வயிர்கள்வால் வளைகள் விம்ம, வரி சிலை
                        சிலைப்ப, மாயப்
பயிர்கள்ஆர்ப்பு எடுப்ப, மூரிப் பல்லியம் குமுற,
                         பற்றி-
செயிர் கொள்வாள் அரக்கர், சீற்றம் செருக்கினர்,-
                         படைகள் சிந்தி,
வெயில்கள்போல்ஒளிகள் வீச, வீரன்மேல் கடிது
                        விட்டார்.

     செயிர்கொள்வாள் அரக்கர் - பகைமை கொண்டவாளேந்திய
அரக்கர்கள்; சீற்றம் செருக்கினர் - சினத்தால் பெருமிதம் கொண்டவர்களாய்;
வயிர்கள் வால் வளைகள் விம்ம - கொம்புகளும் வெண்மையான
சங்குகளும் முழங்கவும்; வரிசிலை சிலைப்ப - கட்டமைந்த விற்கள்
நாணொலியை உண்டாக்கவும்; மாயப் பயிர்கள் ஆர்ப்பு எடுப்ப -
மாயவினைகளை விளைவிக்கும் பயிர்கள் போன்ற அரக்கர்கள் (மகிழ்ச்சி
கொண்டு) ஆரவாரம் செய்யவும்; மூரிப் பல் இயம் குமுற - பெரிய பல
வாத்தியங்கள் முழங்கவும்; படைகள் பற்றி - ஆயுதங்களைத் தமது
கைகளினால் எடுத்து; வெயில்கள் போல் ஒளிகள் வீச - வெயில்களைப்
போலப் பல ஒளிகள் வீசும்படி; வீரன்  மேல் கடிது சிந்தி விட்டார் -
அனுமன் மீது விரைவாக நாற்புறமும் சிதறும்படி விட்டார்கள்.

     அரக்கர்செருக்கினராய், விம்ம, சிலைப்ப, ஆர்ப்பெடுப்ப, குமுற,
படைகள் ஒளி வீச வீரன் மேல் விட்டனர்.                      (22)