5578.

வெருண்டனர், வியந்தனர், விழுந்தனர், எழுந்தார்;
மருண்டனர்,மயங்கினர், மறிந்தனர், இறந்தார்;
உருண்டனர்,உலைந்தனர், உழைத்தனர், பிழைத்தார்;
சுருண்டனர்,புரண்டனர், தொலைந்தனர்;-
                              மலைந்தார்.

     மலைந்தார் -அனுமனோடுபோர் செய்த அரக்கர்களில் (சிலர்);
வெருண்டனர் வியந்தனர் விழுந்தனர் -
அனுமனது திறத்தைக் கண்டு
அச்சம் கொண்டு வியந்தவண்ணம் கீழே விழுந்தனர்; எழுந்தார் -
விழுந்தவர்களில் சிலர் எழுந்தார்; மருண்டனர் மயங்கினர் மறிந்தனர்
இறந்தார் -
மருண்டும் மயங்கியும் குப்புற விழுந்து இறந்தனர்; பிழைத்தார்
உருண்டனர் உலைந்தனர் உழைத்தனர் -
(அவ்வாறு இறவாமல்) உயிர்
பிழைத்தவர்களில் சிலர் உருண்டு, வருந்தி உடல் துவண்டு; சுருண்டனர்
புரண்டனர், தொலைந்தனர் -
தமது உறுப்புக்கள் சுருளப் பெற்று, பூமியில்
புரண்டு வலிகெட்டு ஓடிவிட்டனர்.

     இது,காலட்படையின் அழிவு கூறியது.                       (29)