5580. | மூளையும்உதிரமும் முழங்கு இருங் குழம்பு ஆய் மீள் இருங்குழைபட, கரி விழுந்து அழுந்த, தாளொடும் தலைஉக, தட நெடுங் கிரிபோல் தோளொடும்நிருதரை, வாளொடும்-துகைத்தான். |
மூளையும் உதிரமும்- (அரக்கர்களது) மூளைகளும் இரத்தமும்; முழங்கு இரும் குழம்பு ஆய் - கொதிக்கின்ற பெரிய குழம்பு போலாகி; மீள் இரும் குழை பட - (கண்டவர் அஞ்சி) மீள்கின்ற மிக்க குழை சேறாய் விட; கரி விழுந்து அழுந்த - அச்சேற்றில் யானைகள் விழுந்து அழுந்தி இறந்து போக; தாளொடும் தலை உக - கால்களும் தலைகளும் சிந்திவிழ; தட நெடும் கிரி போல் நிருதரை - பெரிய நீண்ட மலைகளைப் போன்ற அரக்கர்களை; தோளொடும் வாளொடும் துகைத்தான் - தோள்களோடும், (அவர் கையில் கொண்ட) வாளுடனும் (அனுமன் தனது கால்களால்) துகைத்து அழித்தான். (31) |