5583. 

வென்றிவெம் புரவியின் வெரிநினும், விரவார்
மன்றல் அம்தார் அணி மார்பினும், மணித் தேர்
ஒன்றின்நின்றுஒன்றினும், உயர் மத மழை தாழ்
குன்றினும்,-கடையுகத்து உரும் எனக் குதித்தான்.

     வென்றிவெம்புரவியின் வெரிநினும் - வெற்றியைத் தரத்தக்கவலிய
குதிரைகளின் முதுகிலும்; விரவார் மன்றல் அம் தார் அணி மார்பினும் -
பகைவர்களான அரக்க வீரர்களது நறுமணம் உள்ள மாலைகள் அணிந்த
மார்புகளிடத்தும்; மணித்தேர் ஒன்றின் நின்று ஒன்றினும் - மணிகள்
கட்டப்பெற்ற தேர்கள் ஒன்றிலிருந்து மற்றொன்றிலும்; உயர் மத மழை தாழ்
குன்றினும் -
உயர்ந்தோங்கிய
 மதமாகிய மழைபொழிகின்ற மலை போன்ற
யானைகளிடத்திலும்; கடை யுகத்து - யுக முடிவின் காலத்தில்; உரும் எனக்
குதித்தான் -
தோன்றும் இடியே போல, (அனுமன்) குதித்து அழித்தான்.

    முன் கவியில்,சொல்லப்பட்டது, இங்கு விரித்துரைக்கப்படுகின்றது.
மதமழைதாழ் குன்று - என்ற குறிப்பால் யானை என்பது உணர்த்தப்பட்டது.
                                                          (34)