5606.

ஆனைமேல்முரசு அறைந்தனர் வள்ளுவர்
                           அமைந்தார்;
பேன வேலையின்புடை பரந்தது, பெருஞ் சேனை;
சோனை மா மழைமுகில் எனப் போர்ப் பணை
                           துவைத்த;
மீன வான் இடுவில் எனப் படைக்கலம் மிடைந்த.

    வள்ளுவர்அமைந்தார் - பறையறைவோராக இருந்தவர்; ஆனைமேல்
முரசு அறைந்தனர் -
யானையின் மீது ஏறிப் போர் முரசை முழக்கினர்;
பெரும் சேனை பேன வேலையில் - பெரிய அரக்கர் படைகள் நுரையை
உடைய கடலைப் போல; புடை பரந்தது - எல்லாப் பக்கங்களிலும்
பரவலாயிற்று; சோனை மா மழை முகில் என - விடாது பெரு மழை
பொழிகின்ற மேகம் போல; போர்ப் பணை துவைத்த - போர் முரசங்கள்
ஒலித்தன; மீன வான் இடு வில் என - நட்சத்திரங்கள் விளங்கும்
ஆகாயத்தில் தோன்றும் வானவில்லைப் போல; படைக்கலம் மிடைந்த -
போர்ப் படைக் கருவிகள் நெருங்கி விளங்கின.

    போர் முரசு ஒலிக்கு. மழை பொழியும் மேகமும், படைக்கலங்களுக்கு
வான வில்லும் உவமைகள். பேனம் - நுரை பணை - முரசு.         (6)