5610. | வழங்குதேர்களின் இடிப்பொடு வாசியின் ஆர்ப்பும், முழங்கு வெங்களிற்று அதிர்ச்சியும், மொய் கழல் ஒலியும், தழங்குபல்லியத்து அமலையும், கடையுகத்து, ஆழி முழங்கும்ஓதையின், மும் மடங்கு எழுந்தது முடுகி. |
வழங்குதேர்களின் இடிப்பொடு - விரைந்து செல்கின்றதேர்களின் ஒலியும்; வாசியின் ஆர்ப்பும் - குதிரைகளின் கனைப்பு ஒலியும்; முழங்கு வெம் களிற்று அதிர்ச்சியும் - பிளிறுகின்ற கொடிய யானைகளின் பேரொலியும்; மொய் கழல் ஒலியும் - (வீரர்கள் காலில்) கட்டிய வீரக்கழல்களின் ஒலியும்; தழங்கு பல்லியத்து அமலையும் - ஒலிக்கும் பலவாத்தியங்களின் பேரொலியும் (கூடி); கடை யுகத்து ஆழி முழங்கும் ஓதையின் - யுக முடிவுக் காலத்தில் கடல்கள் கொந்தளித்து ஒலிக்கின்ற ஓசையை விட; மும் மடங்கு முடுகி எழுந்தது - மூன்று மடங்கு அதிகமாக விரைந்து மேற்கிளம்பியது. ஒலி, தழங்கல்,அமலை, ஓதை என்பன ஒரு பொருள் குறிக்கும் பல சொற்கள். 'ஆறுபாய் அரவம்', என்ற நாட்டுப் படலப் பாடலில் (கம்ப.34) ஒலி குறித்துப் பல சொற்கள் ஒரு பொருள் குறித்து வந்தன; ஒப்பிட்டுச் சுவைக்கத் தக்கன. (10) |