5611. | ஆழித்தேர்த் தொகை ஐம்பதினாயிரம்; அஃதே சூழிப்பூட்கைக்குத் தொகை; அவற்று இரட்டியின் தொகைய, ஊழிக் காற்றுஅன்ன புரவி; மற்று அவற்றினுக்கு இரட்டி, பாழித் தோள்நெடும் படைக்கலப் பதாதியின் பகுதி. |
ஆழித் தேர்த்தொகை ஐம்பதினாயிரம் - சக்கரங்களைக் கொண்ட தேர்களின் கணக்கு ஐம்பதினாயிரம் என்னும் அளவினதாம்; சூழிப் பூட்கைக்குத் தொகை அஃதே - முகபடாம் அணிந்த யானைகளின் தொகையும் மேலே கூறிய தேர்களின் அளவேயாகும்; ஊழிக் காற்று அன்ன புரவி - யுகாந்த காலத்தில் தோன்றுகின்ற பெருங்காற்றுப் போல வேகமாகச் செல்கின்ற குதிரைகள்; அவற்று இரட்டியின் தொகைய - அந்தத் தேர்ப்படை, யானைப் படைகளைவிட இருமடங்கு தொகை உடையன; பாழித் தோள் நெடும் படைக்கலப் பதாதியின் பகுதி - பெரிய தோள்களையும், சிறந்தஆயுதங்களையும் உடைய காலாட்படைப் பிரிவுகளின் கணக்கு; அவற்றினுக்கு இரட்டி - அந்தக் குதிரைப் படைகளுக்கு இரு மடங்காகும் (இரண்டு லட்சம்) பஞ்சசேனாபதியர் கொணர்ந்த நால்வகைப் படையின் எண்ணிக்கை கூறியது. சூழி - யானைகளின் முகத்தில் அணியும் முகபடாம். பூட்கை - யானை. பாழிதோள் - பெரியதோள். (11) |