5616.

முந்து இயம்பல கறங்கிட, முறை முறை பொறிகள்
சிந்தி, அம்புஉறு கொடுஞ் சிலை உரும் எனத்
                                 தெறிப்பார்;

வந்து இயம்புறுமுனிவர்க்கும், அமரர்க்கும், வலியார்;
இந்தியம் பகைஆயவை ஐந்தும் ஒத்து, இயைந்தார்.

     முந்து இயம் பலகறங்கிட -தங்கள் சேனைக்கு முன்பாக பல போர்
வாத்தியங்கள் ஒலிக்கும்படியாக; முறைமுறை பொறிகள் சிந்தி - அடுத்தடுத்துநெருப்புப் பொறிகளைச் சிதறவிட்டு; அம்பு உறு கொடுஞ்சிலை
-
அம்புகள்பொருந்திய வளைந்த விற்களை; உரும் எனத் தெறிப்பார் -
இடி போல் ஒலிஎழும்படியாக வில் நாணைத் தெறிப்பார்கள்; வந்து இயம்புறு
முனிவர்க்கும்அமரர்க்கும்  வலியார் -
உரியவர்களிடம் வந்து போர்க்
கலை கற்பிக்கும் முனிவர்களுக்கும் தேவர்களுக்கும் மேற்பட்ட வலிமை
உடையவர்கள் அச்சேனாபதியர்; பகையாயவை இந்தியம் ஐந்தும் ஒத்து
இயைந்தார் -
ஆன்மாக்களுக்குப் பகையாகிய இந்திரியங்கள் ஐந்தும் ஒன்றாக
சேர்ந்துவிட்டதுபோல இணைந்தவர்கள், அப் படைத் தலைவர்.

     அம்பு சேர்ந்தவில் நாணைத் தெறிப்பதால் எழும் ஓசை இடியோசை
போல் இருந்தது; மேலும், நாண் விறைப்பாக இருப்பதால் தெறிக்கும்
போதெல்லாம் நெருப்புப் பொறிகள் பறந்தன. போர்க் கலைகளை அரச
குலத்தவர் முதலியோர்க்குக் கற்பிப்பவர் வசிட்டர் போன்ற முனிவர்கள்;
கற்பிக்கும் கலையில் அவர்களும் வல்லவர்களாக இருந்தனர் என்பது புராண,
இதிகாச வரலாறுகள் தெரிவிக்கும் உண்மையாகும். பஞ்ச சேனாபதியர்
அத்தகைய முனிவர்களைக் காட்டிலும் தேவர்களைக் காட்டிலும் வலிமை
கொண்டவராகத் தோற்றம் அளித்தனர். ஆன்ம முன்னேற்றத்துக்கு எதிரணி
வகுத்துக் கொடுக்கும் ஐம்பொறிகளை உவமையாக்கிய நயம் சிந்திக்கத் தக்கது.
                                                     (16)