5621.

இந்திரன்இசை இழந்து ஏகுவான், இகல்
தந்தி முன்கடாவினன் முடுக, தாம் அதன்
மந்தர வால் அடிபிடித்து, 'வல்லையேல்
உந்துதி, இனி'என, வலிந்த ஊற்றத்தார்.

     இசை இழந்துஏகுவான் இந்திரன் - (இராவணனோடு போர்
புரிந்ததால்) தன் புகழ் அழிந்து தோற்றுத் திரும்பிப் போன தேவேந்திரன்; இல்தந்தி முன் கடாவினன் முடுக - வலிமை பொருந்திய (தன் ஐராவதம்
என்னும்) யானையை முன்னே (வேகமாகச்) செலுத்திக் கொண்டு செல்ல; தாம்
-
அவர்கள்; அதன் மந்தர வால் அடிபிடித்து - அந்த யானையினது
அழகான வாலின் அடியைப் பிடித்துக் கொண்டு; வல்லையேல் இனி உந்துதி
என -
நீ வலிமையுள்ளவனானால் இனிமேல் உனது யானையை மேற்
செலுத்துவாய்' என்று; வலிந்த ஊற்றத்தார் - பிடித்து இழுத்துத் (தடை
செய்த) வலிமை உடையவர்கள்.

     மந்தரம் - அழகு;'மென்மை' என்னும் பொருளும் உண்டு.      (21)