5626.

அரக்கரதுஆற்றலும், அளவு இல் சேனையின்
தருக்கும், அம்மாருதி தனிமைத் தன்மையும்,
பொருக்கெனநோக்கிய புரந்தராதியர்,
இரக்கமும்,அவலமும், துளக்கும், எய்தினார்.

     அரக்கரதுஆற்றலும் - (அனுமனைச் சூழ்ந்துகொண்ட) பஞ்ச
சேனாபதிகளின் வலிமையையும்; அளவு இல் சேனையின் தருக்கும் -
அளவற்ற அந்தச் சேனையின் பெருமிதத்தையும்; அம்மாருதி தனிமைத்
தன்மையும் -
அந்த அனுமன் தனியாய் நிற்கும் நிலைமையையும்;
பொருக்கென நோக்கிய புரந்தராதியர் -
திடீரென்று பார்த்த இந்திரன்
முதலிய தேவர்கள்; இரக்கமும், அவலமும் துளக்கும் எய்தினார் -
(அனுமனிடத்துக்) கருணையும், துன்பமும் நடுக்கமும் (ஒருங்கே) அடைந்தனர்.

     இந்திரன் முதலியதேவர்கள், பஞ்ச சேனாபதிகளின் ஆற்றலை நன்கு
அறிந்தவர்கள்.  அதனால்,  சேனைகளின் நடுவில் தனித்து நிற்கும் அனுமனது
நிலைக்கு, இரக்கமும் அவலமும் அடைந்தனர்.                     (26)