அனுமன் செய்தபோர் 5632. | உற்று,உடன்று, அரக்கரும், உருத்து உடற்றினர்; செற்றுறநெருக்கினர்; 'செருக்கும் சிந்தையர் மற்றையர் வரும்பரிசு, இவரை, வல் விரைந்து எற்றுவென்' என,எழு, அனுமன் ஏந்தினான். |
அரக்கரும் -அந்தஅரக்கவீரர்களும்; செருக்கும் சிந்தையர் உற்று -அகந்தை கொண்ட மனத்தினராய் அனுமனை நெருங்கி; உடன்று, உருத்து உடற்றினர் - சினத்தால் மாறுபட்டு, கருஞ்சினம் மூண்டு விரைந்து படைக்கலங்களைப், பரபரப்புடன் விட்டனர்; செற்று உற நெருக்கினர் - இறந்து பட அனுமனைப் பல வழியாலும் தாக்கினர்; அனுமன் - (அப்போது) அனுமான்; மற்றையர் வரும் பரிசு - 'மற்றுமுள்ள அரக்கரும் போர் செய்ய வரும் விதமாக; இவரை வல் விரைந்து எற்றுவென்' என - இந்த அரக்கர்களை அழிப்பேன்' என்று எண்ணி; எழு ஏந்தினான் - இரும்புத் தூணைக் கையில் எடுத்துக் கொண்டான். அரக்கர்களின்போர்ச் செயலும், அனுமனது வீரச் செயலும் கூறப்பட்டது. (32) |