5633.

ஊக்கியபடைகளும், உருத்த வீரரும்,
தாக்கியபரிகளும், தடுத்த தேர்களும்,
மேக்கு உயர்கொடியுடை மேக மாலைபோல்
நூக்கியகரிகளும், புரள நூக்கினான்.

     ஊக்கியபடைகளும் - அரக்கர்கள் தன்மீது செலுத்திய ஆயுதங்களும்;
உருத்த வீரரும் - கோபித்து வந்த வீரர்களும்; தாக்கிய பரிகளும் - வந்து
மோதிய குதிரைகளும்; தடுத்த தேர்களும் - தன்னைத் தடுத்து நின்ற
தேர்களும்; மேக்கு உயர் கொடி உடை - மேலே உயர்ந்த கொடிகளைக்
கொண்ட; மேக மாலை போல் நூக்கிய கரிகளும் - மேகங்களின் வரிசை
போன்றனவுமான (தன்மீது) செலுத்தப்பட்ட யானைகளும்; புரள நூக்கினான் -
(மண் மீது விழுந்து) புரண்டழியும் படி (அனுமன் எழுவைக் கொண்டு)
கொன்றான்.

     அனுமன், தன்கையில் ஏந்திய எழுவைக்கொண்டு (இரும்புத் தூண்)
எதிரிகளின் ஆயுதம் முதலியவற்றை அழித்தது பற்றிக் கூறப்பட்டது.    (33)