5637. | உதைக்கும்வெங் கரிகளை; உழக்கும் தேர்களை; மிதிக்கும் வன்புரவியை; தேய்க்கும் வீரரை; மதிக்கும் வல்எழுவினால்; அரைக்கும் மண்ணிடை; குதிக்கும் வன்தலையிடை; கடிக்கும்; குத்துமால். |
உதைக்கும் வெம்கரிகளை - (பகைவர் தன் மீது)செலுத்துகின்ற கொடிய யானைகளைக் காலில் உதைப்பான்; தேர்களை உழக்கும் - தேர்களைக் கலக்குவான்; வன் புரவியை மிதிக்கும் - வலிய குதிரைகளைக்காலால் மிதிப்பான்; வீரரைத் தேய்க்கும் -வீரர்களைத் தரையோடு சேர்த்துத் தேய்த்து விடுவான்; வல் எழுவினால் மண்ணிடை மதிக்கும் - (தான் கையில் கொண்ட) வலிய எழுவால் தரையிட்டுக் குழம்பாக்குவான்; வன் தலை இடைக் குதிக்கும் - (மேலும்) அவ்வரக்கரின் தலையிடத்தே குதிப்பான்; கடிக்கும், குத்தும் - அவர்களைக் கடிப்பான் குத்துவான். எழு - ஒருவகைப்போர்க் கருவி. மதிற்கதவில் குறுக்கே இடப்படும் கணையமரம் எனவும் கூறுவர். மதித்தல் - கடைவது போலக் குழப்புதல். (37) |