5638.

விசையின்மான் தேர்களும், களிறும் விட்டு, அகல்
திசையும்ஆகாயமும் செறிய, சிந்துமால்;
குசை கொள் பாய் பரியொடும், கொற்ற வேலொடும்,
பிசையுமால்அரக்கரை, பெருங் கரங்களால்.

     விசையின் -(மேலும்அவ்வனுமன்) வேகமாக; மான் தேர்களும்
களிறும் விட்டு -
குதிரைகள் பூட்டப்பட்ட தேர்களையும் யானைகளையும்
விட்டெறிந்து; அகல் திசையும் ஆகாயமும் செறியச் சிந்தும் - அகன்ற
திக்குகளும் ஆகாசமும் போய் நிறையும் படி சிதறிவிழச் செய்வான்; குசை
கொள் பாய் பரியொடும் -
கடிவாளத்தைக் கொண்ட பாய்ந்து செல்லும்
தன்மையுள்ள குதிரைகளுடனும்; கொற்ற வேயொடும் - (கையிற் பிடித்த)
வெற்றி பொருந்திய வேலாயுதத்துடனும்; அரக்கரை - அந்த அரக்க
வீரர்களை; பெரும் கரங்களால் - (தனது) பெரிய கைகளினால்; பிசையும் -
பிசைந்து கொல்வான்.

     மான் - குதிரை.குசை - கடிவாளம்.                       (38)