5641.

மீ உறவிண்ணிடை முட்டி வீழ்வன,
ஆய் பெருந்திரைக் கடல் அழுவத்து ஆழ்வன,
ஓய்வில புரவி,வாய் உதிரம் கால்வன,
வாயிடை எரியுடைவடவை போன்றவே.

     மீ விண் இடை உற- மேலேயேஉள்ள வானிடத்துப் பொருந்த,
'(அனுமன் வீசி எறிந்ததனால்); முட்டி வீழ்வனவாய் - சென்று முட்டுண்டு
கீழே விழுகின்றனவாய்; பெருந்திரைக் கடல் அழுவத்து ஆழ்வன - பெரிய
அலைகளை உடைய கடற் பரப்பில் அமிழ்வனவும்; ஓய்வில புரவி -
எண்ணிறந்த குதிரைகள்; வாய் உதிரம் கால்வன - வாய்களினின்றும் இரத்த
நீரைச்
சொரிகின்றவை;வாயிடை எரி உடை - வாயிடத்து நெருப்பை உடைய;
வடவை போன்ற -
வடவாமுகாக்கினி போன்று விளங்கின.

     வடவை என்பதுகடலில் உள்ள நீர் கொந்தளித்து எழாதபடி அந்
நீரைச்சுவறச் செய்யும் தீயைத் தன்முகத்தில் கொண்டுள்ளதாய்க் கடவுளால்
அமைக்கப்பெற்ற ஒரு பெண் குதிரை என்று நூல்கள் கூறும். இங்குக்
குதிரைகள், வடவைக் குதிரைக்கும், அவற்றின் வாயிலிருந்து வெளிப்படும்
இரத்தம் அவ் வடவைக்குதிரை வாயிலிருந்து தோன்றும் நெருப்புக்கும் உவமை
ஆயின.                                                   (41)