5642. | வரிந்து உறவல்லிதின் சுற்றி, வாலினால் விரிந்து உறவீசலின், கடலின் வீழ்குநர் திரிந்தனர்-செறி கயிற்று அரவினால் திரி அருந் திறல்மந்தரம் அனையர் ஆயினார். |
வாலினால்வல்லிதின் உறச் சுற்ற வரிந்து - அனுமன் தனது வாலினால் அழுத்தமாகச் சுற்றிக்கட்டி; விரிந்து உற வீசலின் - வெகு தூரம் செல்லும்படி வீசியெறிதலினால்; கடலின் வீழ்குநர் திரிந்தனர் - கடலில் போய் விழுந்து சுழல்கின்ற அரக்கவீரர்கள்; செறி கயிற்று அரவினால் திரி - நெருங்கிய வாசுகி என்னும் (பாம்பு) கயிற்றினால் கடையப்பட்டுச் சுழன்ற; அருந் திறல் மந்தரம் அனையர் ஆயினார் - அரிய வலிமை பெற்ற மந்தரமலையை ஒத்தவராயினர். அரக்கர்களாகியகாலாட்படை அழிந்தமை கூறப்பட்டது. அரக்கர்கள் மந்தர மலைக்கும் அனுமன்வால் வாசுகி என்னும் பாம்புக்கும் உவமை. (42) |