5643.

வீரன் வன்தடக் கையால் எடுத்து வீசிய
வார் மதக்கரியினின், தேரின், வாசியின்,
மூரி வெங் கடல்புகக் கடிதின் முந்தின,
ஊரின் வெங்குருதி ஆறு ஈர்ப்ப ஓடின.

     ஊரின் வெம்குருதி ஆறு - விரைந்து செல்கின்றவெப்பமுள்ள
இரத்தப் பெருக்குகள்; வீரன்வன் தடக்கையால் - அனுமன் தனது பெரிய
கைகளால்; எடுத்து வீசிய - எடுத்து வீசி எறிந்த; வார் மத கரியி்னின் -
ஒழுகுகின்ற மத நீரை உடைய யானைகளினும்; தேரின் - தேர்களினும்;
வாசியின் - குதிரைகளினும்; மூரி வெம்கடல்புக கடிதின் முந்தின - வலிய
கொடிய கடலில் புக விரைந்தனவாய்; ஈர்ப்ப ஓடின - இழுக்கப்பட்டு ஓடின.

     'ஊரின்' என்பதுவிரைவின் என்ற பொருளில் வந்துள்ளது அருகிய
வழக்கு.                                                    (43)