5649.

எய்த கடுங்கணை யாவையும், எய்தா
நொய்துஅகலும்படி, கைகளின் நூறா,
பொய்து அகடுஒன்று பொருந்தி, நெடுந் தேர்
செய்த கடும்பொறி ஒன்று, சிதைத்தான்.

     எய்த கடும்கணையாவையும் எய்தா - (அந்தப் பஞ்சசேனாபதிகள்)
எய்த கொடிய அம்புகள் எல்லாம் தன்னை வந்து அடையாமல்; நொய்து
அகலும்படி கைகளின் நூறா -
எளிதில் ஒழிந்து போம்படி (தன்)
கைகளினால் தூளாக்கிவிட்டு; நெடுந்தேர் - (பிறகு, பஞ்ச சேனாபதிகளுள்
ஒருவனது) பெரிய தேரிலே; பொய்து - துளைக்கப்பட்டு; அகடு ஒன்று
பொருந்தி செய்து -
நடுவில் நாட்டப்பட்டதாகிப் பொருந்தி  செய்திருந்த;
கடும் பொறி ஒன்று சிதைத்தான் -
விரைந்து செல்வதற்குரிய இயந்திரம்
ஒன்றை அழித்தான்.

     அந்தப் பஞ்சசேனாபதிகளை அழிக்கக் கருதிய அனுமன், அவர்களுள்
ஒருவனது தேரின் விசையந்திரத்தைச் சிதைத்தான் என்பதாம்.        (49)