5651. | முறிந்ததுமூரி வில்; அம் முறியேகொடு எறிந்த அரக்கன், ஓர் வெற்பை எடுத்தான்; அறிந்தமனத்தவன், அவ் எழுவே கொடு எறிந்த அரக்கனைஇன் உயிர் உண்டான். |
மூரிவில்முறிந்தது - (அந்த அரக்கனுடைய)வலிய வில் முறிந்து போயிற்று; அம் முறியே கொடு - அந்த வில்லின் முறிந்த துண்டையே கையில் கொண்டு; எறிந்த அரக்கன் - அனுமன் மீது வீசி எறிந்த அந்த அரக்கன்; ஓர் வெற்பை எடுத்தான் - மீண்டும் ஒரு மலையை அனுமன் மீது எறியத் தூக்கினான்; அறிந்த மனத்தவன் - அரக்கனின் கருத்தை அறிந்த மனத்தவனாகிய அந்த அனுமன்; அவ் எழுவே கொடு - (தனது கையில் கொண்டிருந்த) அந்த இரும்புத் தூணைக் கொண்டே; எறிந்த அரக்கனை - தன்மீது வில் முறிகொண்டு எறிந்த அரக்கனுடைய; இன் உயிர் உண்டான் - இனிய உயிரை அழித்தான். அரக்கன் மலையைஎடுப்பது அறிந்து அதற்கு முன்னே அனுமன் அவனை இரும்புத் தூணால் அடித்துக் கொன்றான் என்க. அரக்கனே யாயினும் அவனுக்கு அவன் உயிர் இனியதுதானே; ஆகையால் அரக்கனது உயிரை 'இன்னுயிர்' என்றார். (51) |