சேனாதிபதி ஐவர்அழிவினை இராவணனுக்கு அறிவித்தல் 5666. | 'இறுக்குறும், இன்னே நம்மை, குரங்கு' என இரங்கி ஏங்கி, மறுக்குறுகின்றநெஞ்சின் மாதரை வைது நோக்கி, உறுக்குறும்சொல்லான், ஊழித் தீ என உலகம் ஏழும் சுறுக்கொளநோக்குவான்தன் செவித் தொளை தீய, சொன்னார். |
குரங்கு நம்மைஇன்னே இறுக்குறும் என - (குரங்கினால் விளையும் அழிவுகளைக் கேள்வியுற்று) 'அந்தக் குரங்கு நம்மை இப்பொழுதே கொன்றுவிடும்' என்று; ஏங்கி இரங்கி - ஏக்கமுற்று வருந்தி; மறுக்கு உறுகின்ற நெஞ்சின் மாதரை - கலக்கமுறும் மனத்தோடு நடுங்கிக் கொண்டு, தன் அருகில் நிற்கின்ற மகளிரை; வைது நோக்கி - (இராவணன்) நிந்தித்துப் பார்த்துக் கொண்டு; உறுக்கு உறுசொல்லான் - அதட்டும் கடுஞ் சொற்களால்; ஊழித் தீ என உலகம் ஏழும் சுறு கொள - கற்பாந்த காலத்துத் தோன்றும் பெருந்தீ என உலகங்கள் ஏழும் தீய்ந்து போம்படி; நோக்குவான் தன் - பார்த்துக் கொண்டிருப்பவனாகிய இராவணனுடைய; செவித் தொளை - இருபது காதுகளின் துவாரங்களும்; தீயச் சொன்னார் - தீய்ந்து போம்படி (கர்ண கடூரமாக பஞ்ச சேனாபதிகள் இறந்த செய்தியைக்)கூறலானார்கள். (66) |