அக்ககுமாரன்அனுமனுடன் போருக்கு எழ
இராவணனிடம் விடைபெறுதல் 

5668.

கேட்டலும்,வெகுளி வெந் தீக் கிளர்ந்து எழும்
                              உயிர்ப்பனாகி,
தோட்டு அலர்தெரியல் மாலை வண்டொடும்
                             சுறுக்கொண்டு எற,
ஊட்டு அரக்குஉண்ட போலும் நயனத்தான்
                             ஒருப்பட்டானை,
தாள்-துணைதொழுது, மைந்தன் தடுத்து,
                        'இடைதருதி' என்றான்.

     ஊட்டு அரக்குஉண்ட போலும் நயனத்தான்  - பூசப்பட்ட
அரக்குப்படியப்பெற்றது போன்ற செந்நிறமாய் விளங்கும் கண்களை உடைய
இராவணன்; கேட்டலும் - (பஞ்ச சேனாபதிகளும் சேனைகளும் இறந்தனர்
எனக்) கேட்டவுடன்;
வெகுளி வெந்தீக்கிளர்ந்து எழும் உயிர்ப்பனாகி -
கோபக் கொடுந்தீ,பொங்கி வருகின்ற பெருமூச்சை உடையவனாகி; தோட்டு
அலர் தெரியல்மாலை -
இதழ்கள் மலரப் பெற்றதும் தேர்ந்து
தொடுக்கப்பட்டதுமானஅவனுடைய மாலை; சுறுக் கொண்டு ஏற - பொசுங்கி
நாற்றம் பரந்து வீச;ஒருப் பட்டானை - போருக்கு ஆயத்தமாய் நின்ற
இராவணனை; மைந்தன் -அவன் மகனாகிய அக்ககுமாரன்; தாள் துணை
தொழுது -
அவனது இரண்டுபாதங்களிலும் வணங்கி; தடுத்து - அவனைப்
போருக்குச் செல்லாமல் தடுத்து;'இடை தருதி' என்றான் - (யான் சென்று
போர் புரியுமாறு எனக்கு)'வாய்ப்புத் தருக' என்று கேட்டுக் கொண்டான். 

     நயனத்தான்,கேட்டலும், வெகுளி கிளர்ந்து உயிர்ப்பனாகி, மாலை
சுறுக்கொண்டு ஏற ஒருப்பட்டான்; மைந்தன், தாள் தொழுது, தடுத்து, வாய்ப்புத்
தருக என்றான் என்பது முடிவு. ஒருப்படுதல் - இயைந்திருத்தல்; ஊட்டுதல் -
செந்நிறச் சாயம்பூசுதல். அக்கன் - அக்ஷன் என்பதன் தமிழ்த்திரிபு.
அழிவில்லாதவன் என்று பொருள். இவன், மண்டோதரி மகன்;
இந்திரசித்தனுடைய தம்பி.                                      (1)