5669.

'முக்கணான்ஊர்தி அன்றேல், மூன்று உலகு
                        அடியின் தாயோன்
ஒக்க ஊர் பறவைஅன்றேல், அவன் துயில் உரகம்
                         அன்றேல்,
திக்கயம்அல்லதேல், புன் குரங்கின்மேல் சேறி
                         போலாம் !
இக் கடன்அடியேற்கு ஈதி; இருத்தி ஈண்டு
                         இனிதின்; எந்தாய் !

     எந்தாய் -என்தந்தையே !; முக்கணான் ஊர்தி அன்றேல் -
(நம்மோடு பொருவது) மூன்று கண்களை உடைய சிவபிரானது வாகனமாகிய
இடபம் அன்றாயின்; மூன்று உலகு அடியில் தாயோன் - மூவுலகங்களையும்
தன் ஈரடிகளால் தாவியளந் தவனாகிய திருமால்;  ஒக்க ஊர் பறவை
அன்றேல் -
சிறப்பமைய ஊர்ந்து செல்லும் பறவையாகிய கருடன்
அன்றாயின; அவன் துயில் உரகம் அன்றேல் - அத்திருமால் பள்ளி
கொள்ளும் பாம்பாகிய ஆதிசேடன் அன்றாயின்; திக்கயம் அல்லதேல் -
திக்குகளில் இருக்கும் யானைகளில் ஒன்றும் அன்றாயின்; புன்குரங்கின் மேல்
சேறி போலாம் -
அற்பக்குரங்கின் மீது போருக்குச் செல்கின்றாய் போலும் !
(நீ பொரச் செல்வது சிறிதும் தகுதியன்று); இக்கடன் அடியேற்கு ஈதி -
இந்தக் கடமையை எனக்குத் தந்து; ஈண்டு இனிதின் இருத்தி - இ்ங்கு நீ
(கவலையின்றி) இனிதாக இருப்பாயாக.

     இதுவும் அடுத்தபாடலும் குளகமாய், 'ஏவுதி என்னை என்றான்'
என்பதோடு வினை முடிவு பெறும். 'நீ விலங்குகளோடு எதிர்த்துப் போர்
புரிவது உனக்கு இழுக்கு; சிவபிரானின் இடபம், திருமாலின் கருடன்,
ஆதிசேடன், திக்கயம் இவற்றோடு போர் செய்தாலும் ஒருவாறு நேராகும்.
அற்பக் குரங்கோடு போர் செய்யச் செல்வது, உன் பெருமைக்கும்
வலிமைக்கும் குறைவு' என்று கூறினான்.                            (2)