5670. | ' "அண்டர்கோன்தன்னைப் பற்றித் தருக" எனா, அடியேன் நிற்க, கொண்டனைஎன்முன் தன்னைப் பணி என, நெஞ்சம் கோடல் உண்டு; அது தீரும்அன்றே ? உரன் இலாக் குரங்கு ஒன்றேனும், எண் திசை வென்றநீயே, ஏவுதி என்னை' என்றான். |
அடியேன் நிற்க -அடியவனானநான், (உனது ஆணையை ஏற்றுச் செய்ய சித்தமாக) இருக்கவும், (என்னை ஏவாமல்); என்முன் தன்னை - என் தமையனான மேகநாதனை; அண்டர் கோன் தன்னைப் பற்றி தருக எனா - தேவர் தலைவனான இந்திரனைப் பிடித்து வருவாய் என்று சொல்லி; பணி கொண்டனை என - அவனை அத்தொழிலைச் செய்யக் கொண்டாய் என்று; நெஞ்சம் கோடல் உண்டு - மனத்தில் கொண்ட குறை ஒன்று உள்ளது; உரன் இலாக் குரங்கு ஒன்றேனும் - (இப்போது நான் வெல்லப் போவது) வலியற்ற ஒரு குரங்கையாவது பற்றித் தருக என்றால்; அது தீரும் அன்றே - (அதனைப் பிடித்துத் தந்தால்) அக்குறை ஒருவாறு நீங்கும் அல்லவா?; எண்திசை வென்றநீயே - எட்டுத்திக்குகளையும் வென்ற நீயே; என்னை ஏவுதி என்றான் - என்னை அத்தொழிலுக்கு ஏவுவாயாக என்று கேட்டுக் கொண்டான். இந்திரனைப்பிடித்துத்தரும் வாய்ப்பைத் தமையன் இந்திர சித்துவுக்குத் தந்த போதே அதற்குத் தன்னை ஏவவில்லையே என்ற வருத்தம் தனக்கு உண்டென்றும் இந்த வெறும் குரங்கையாவது பற்றித்தருமாறு ஏவினால் ஒருவாறு அந்த மனக்குறை தீரும் என்றும் அக்ககுமாரன் வேண்டுகிறான். (3) |