அக்ககுமாரன்போருக்குப் போதல் 5673. | என, இவைஇயம்பி, 'ஈதி விடை' என, இறைஞ்சி நின்ற வனை கழல்வயிரத் திண் தோள் மைந்தனை மகிழ்ந்து நோக்கி, 'துனை பரித்தேர்மேல் ஏறிச் சேறி' என்று, இனைய சொன்னான்; புனை மலர்த்தாரினானும், போர் அணி அணிந்து போனான். |
என இவை இயம்பி- என்றுஇச்சொற்களைக் கூறி; 'விடை ஈதி' என- அனுமதி எனக்கு அளிப்பாயாக என்று; இறைஞ்சி நின்ற - வணங்கித் தன்முன் நிற்கின்ற; வனைகழல் வயிரத் திண்தோள் மைந்தனை - கட்டிய வீரக்கழல்களையும் மிக வலிய தோள்களையும் உடைய அக்ககுமாரனை; மகிழ்ந்துநோக்கி - (இராவணன்) மகிழ்ச்சியோடு பார்த்து; துனை பரித் தேர் மேல்ஏறிச் சேறி என்று - 'விரைந்து செல்லும் குதிரைகள் பூட்டிய தேர் மீது ஏறிநீ போவாயாக' என்று; இனைய சொன்னான் - இவ்வாறாகச் சொன்னான்;புனை மலர்த் தாரினானும் - அழகிய மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையைஅணிந்துள்ள அக்ககுமாரனும்; போர் அணி அணிந்து - போர்க் கோலம்பூண்டு; போனான் - சென்றான். எப்படியிருந்தாலும் குரங்கைப் பிடித்து வருவேன் என்று தன் மகன் உறுதி கூறியதனால், இராவணன், அவனை மகிழ்ந்து நோக்கி, போர்க்களம் செல்ல விடை கொடுத்தான். துனை - விரைவு; 'கழிவும் துனைவும் விரைவி்ன் பொருள' (தொல். சொல். 315) (6) |