5675. | பொரு கடல்மகரம் எண்ணில், எண்ணலாம் பூட்கை; பொங்கித் திரிவன மீன்கள்எண்ணில் எண்ணலாம் செம் பொன் திண்தேர்; உரு உறு மணலைஎண்ணில், எண்ணலாம் உரவுத் தானை; வரு திரை மரபின்எண்ணில், எண்ணலாம் வாவும் வாசி. |
பொருகடல் மகரம்எண்ணில் - அலைகள் மோதும்கடலில் உள்ள சுறாமீன்களை எண்ணக் கூடுமானால்; பூட்கை எண்ணலாம் - (அக்ககுமாரனுடன் போருக்குச் சென்ற) யானைகளை எண்ணிக் கணக்கிடலாம்; பொங்கித் திரிவன மீன்கள் எண்ணில் - (அந்தக் கடலில்) செருக்கித் திரிவனவாகிய மீன்களை எண்ணமுடியுமானால்; செம்பொன்திண் தேர் எண்ணலாம் - செம்பொன்னாலான தேர்களை எண்ண முடியும்; உருஉறு மணலை எண்ணில் - அக்கடலில் தனித்தனியாகப் பிரித்து வைத்த மணலை எண்ணக் கூடுமானால்; உரவுத் தானை எண்ணலாம் - வலிமை பொருந்திய காலாள் சேனையை எண்ண முடியும்; மரபின் வரு திரை எண்ணில் - முறைமுறையாக வருகிற அலைகளை எண்ணக் கூடுமானால்; வாவும் வாசி எண்ணலாம் - தாவிச் செல்லும் குதிரைகளை எண்ண முடியும். அக்ககுமாரனுடன்சென்ற நால்வகைப் படையின் மிகுதி தெரிவிக்கப்பட்டது. (8) |