5681.

உழைக் குலநோக்கினார்கள், உலந்தவர்க்கு உரிய
                         மாதர்,
அழைந்து அழுகுரலின், வேலை அமலையின்,
                        அரவச் சேனை
தழைத்து எழும்ஒலியின், நானாப் பல் இயம்
                        துவைக்கும் தா இல்
மழைக் குரல்இடியின், சொன்ன மாற்றங்கள் ஒழிப்ப
                         மன்னோ;

     உலந்தவர்க்குஉரிய மாதர் - (முன்னே நிகழ்ந்தபோரில்) இறந்த
அரக்கர்களுக்கு உரிய மனைவியர்களாகிய; உழைக்குலம் நோக்கினார்கள் -
மான் கூட்டம் போன்ற (மருண்ட) பார்வையை உடைய அரக்கியர்கள்;
அழைத்து அழுகுரலின் -
தமது கணவர்களை நினைத்து அழைத்து
அழுகின்ற குரலினாலும்; வேலை அமலையின் - கடலின் ஒலியினாலும்;
அரவச் சேனை தழைத்து எழும் ஒலியின் -
ஆரவாரம் செய்கின்ற
சேனைகள் திரண்டு செல்வதால் நிகழ்ந்த ஒலியினாலும்; நானா பல் இயல்
துவைக்கும் -
பலவகையான வாத்தியங்கள் ஒலிக்கின்ற; தா இல்
மழைக்குரல் இடியின் -
குற்றம் இல்லாத மேகத்தின் தொனியாகிய
இடிபோன்ற பேரொலியாலும்; சொன்ன மாற்றங்கள் ஒழிப்ப - ஒருவர்க்கு
ஒருவர் பேசிய வார்த்தைகள் பிறர்க்குக் கேட்காமல் அடங்கிவிடவும்....

     'விழுங்க' எனஅடுத்த கவியோடு தொடரும் படை செல்லுங்கால்
எழுந்த பேரொலி வருணிக்கப்பட்டது.                           (14)