5684.

வெள்ள வெஞ் சேனை சூழ, விண் உளோர் வெருவி
                          விம்ம,
உள்ளம் நொந்துஅனுங்கி, வெய்ய கூற்றமும் உறுவது
                          உன்ன,
துள்ளிய சுழல் கண் பேய்கள் தோள் புடைத்து
                          ஆர்ப்ப தோன்றும்
கள் அவிழ்அலங்கலானைக் காற்றின் சேய் வரவு
                          கண்டான்.

     வெள்ள வெஞ்சேனைசூழ - வெள்ளம் என்னும் கணக்கான கொடிய
சேனைகள் தன்னைச் சூழ்ந்து வரவும்; விண் உளோர் வெருவி விம்ம -
தேவர்கள் அஞ்சிக் கலக்கம் அடையவும்; உள்ளம் நொந்து அனுங்கி,
வெய்ய கூற்றமும் உறுவது உன்ன -
மனம் வருந்தியிருந்த கொடிய யமனும்
எது என்ன ஆகுமோ என அழுங்கி நிற்கவும்; துள்ளிய சுழல் கண் பேய்கள்
-
மகிழ்ச்சியால் துள்ளியனவும் சுழல்கின்ற கண்களை உடையனவுமாகிய
பேய்கள்; தோள் புடைத்து ஆர்ப்ப - தம் தோள்களைக் கொட்டி ஆரவாரம்செய்யவும்; காற்றின் சேய் - வாயுவின் மகனாகிய அனுமன்;
தோன்றும் கள்அவிழ் அலங்கலானை -
விளக்கமாகத் தெரியும் தேன்
சொரியும் மாலைஅணிந்த அக்ககுமாரனின்; வரவு கண்டான் - வருகையைப்
பார்த்தான்.

     அனுமன் பார்த்தபோது, அக்ககுமாரனது வருகை எப்படி
அமைந்திருந்தது என்பதைத் தெரிவிக்கின்றது இப்பாடல். அலங்கலானைப்
பார்த்தான்; வரவு பார்த்தான் எனத் தனித்தனி கூட்டிப் பொருள் கொள்க.
வெள்ளம் - ஒருபேரெண். பேய் ஆர்ப்ப என்பதால் அரக்கர் அழிவு
குறித்ததாயிற்று.                                              (17)