5687.

'பழி இலதுஉரு என்றாலும், பல் தலை அரக்கன்
                         அல்லன்;
விழிகள்ஆயிரமும் கொண்ட வேந்தை வென்றானும்
                         அல்லன்;
மொழியின், மற்று அவர்க்கு மேலான்; முரண்
                     தொழில் முருகன் அல்லன்;
அழிவு இல் ஒண்குமரன் யாரோ, அஞ்சனக் குன்றம்
                        அன்னான் ?'

     அஞ்சனக் குன்றம்அன்னான் - மைந் நீலமலை போலவிளங்குகின்றஇவன்; உருபழி இலது என்றாலும் - இவனுடைய வடிவம்
குற்றம் அற்றதுஎன்றாலும்; பல் தலை அரக்கன் அல்லன் - பத்துத்
தலைகளை உடையஅரக்கனாகிய இராவணன் அல்லன்; விழிகள் ஆயிரமும்
கொண்ட வேந்தைவென்றானும் அல்லன் -
ஆயிரம் கண்களைக் கொண்ட
தேவேந்திரனைவென்ற இந்திரசித்தும் அல்லன்; மொழியின் - ஆராய்ந்து
கூறுமிடத்து; மற்றுஅவர்க்கு மேலான் - மற்றைய அவர்களுக்கும்
(இராவணன் மேகநாதன்)மேம்பட்டவனாகத் தோன்றுகின்றான்; முரண்
தொழில் முருகன் அல்லன் -
போர்த் தொழிலிற் சிறந்த முருகக் கடவுளும்
அல்லன்; அழிவு இல் குமரன்யாரோ ? - கேடு என்பதே இல்லாத
பராக்கிரமமுடைய இக் குமரன் யாரோ?.

      அனுமன் முன்பேஇராவணனையும் இந்திரசித்தையும் பார்த்தவன்
[ஊர்தேடு படலம் (4974. 5040 - 5052 காண்க] ஆதலால்
வந்திருப்பவன்
அவர்களில் ஒருவனல்லன் எனத் தெளிந்தான். போர்த்தொழில்
வல்லமையும் வெல்லும் திறனும் உடைய சேவகப் பெருமாளாகிய முருகனை
வீரர்க்கு உவமை சொல்வது மரபு; 'கடம்பு அமர் நெடுவேள் அன்ன மீளி
உடம்பிடித் தடக்கை ஓடா வம்பலர்' (பெரும்பாண் 75-76) எனவும், வென்றி
நெடுவேள் (குறுந். 111) எனவும் வந்தன. அறநெறியில் செல்லாத அரக்கர்
சார்பினனாக முருகன் வாரான் என்பதால் வருபவன் முருகன் அல்லன் எனத்
தெளிந்தான். விழிகள் ஆயிரம் கொண்ட இந்திரனை வென்றவன் மேகநாதன்;
இவ்வெற்றியால் இந்திரஜித் எனப் பெயர் பெற்றான். இராவணனுக்கும்
இந்திரசித்துக்கும் மேலான பெருவீரம் படைத்தவன்  அக்ககுமாரன் எனப்
பார்த்த அளவில் கணிக்கிறான் அனுமன்.                        (20)