5689.

அன்னதாம்அச் சொல் கேட்ட சாரதி, 'ஐய !
                   கேண்மோ !
இன்னதாம்என்னல் ஆமோ உலகியல் ? இகழல்
                    அம்மா;
மன்னனோடுஎதிர்ந்த வாலி குரங்கு என்றால்,
                   மற்றும் உண்டோ ?
சொன்னதுதுணிவில் கொண்டு சேறி' என்று,
                   உணரச் சொன்னான்.

     அன்னது ஆம்அச்சொல் கேட்ட சாரதி -அத்தன்மைத்தான
இழித்துக் கூறிய சொல்லைக் கேட்ட, தேர்ப்பாகன்; ஐய ! கேண்மோ -
(அக்ககுமாரனைப் பார்த்து) 'ஐயனே ! நான் சொல்வதைக் கேட்பாயாக; உலகு
இயல் இன்னது ஆம் என்னல் ஆமோ -
உலகில் நடைபெறும் செயல்கள்
இத்தன்மையானவை என்று துணிந்து கூறமுடியுமா ? (கூற முடியாது); இகழல்
-
குரங்குதானே என்று இகழ வேண்டாம்; மன்னனோடு எதிர்ந்த வாலி -
நம் அரசனாகிய இராவணனோடு முன்வந்து எதிர்த்து நின்று வென்ற வாலி
என்பவன்; குரங்கு என்றால் மற்றும் உண்டோ ? - ஒரு குரங்கே யாகும்
என்றால் மேலும் சொல்வதற்கு இடம் உண்டோ ? சொன்னது, துணிவில்
கொண்டு சேறி' -
யான் சொன்னதை உறுதியாக மனத்தில் கொண்டு
(இதனிடத்தில் வெற்றிபெற வேண்டுமே என்ற எண்ணத்துடன்) செல்வாயாக';
என்று உணரச் சொன்னான் -
என்று அக்ககுமாரன் அறிந்து கொள்ளுமாறு
கூறினான்.

     இராவணன்வாலியின் வாலில் சிறைப்பட்டதை குறிப்பாகக் கூறியதும்
குரங்கு ஏளனத்துக்கு உரியதல்ல என்று உணர்த்தியதும் சாரதியின் அறிவுச்
சிறப்பைக் காட்டுகின்றது.                                    
(22)