அக்ககுமாரன்வஞ்சினம் 

 5690.

விடம்திரண்டனைய மெய்யான், அவ் உரை விளம்பக்
                           கேளா,
'இடம் புகுந்துஇனைய செய்த இதனொடு சீற்றம்
                           எஞ்சேன்;
தொடர்ந்து சென்று உலகம் மூன்றும் துருவினென்,
                               ஒழிவுறாமல்
கடந்து, பின்குரங்கு என்று ஓதும் கருவையும்
                      களைவென்' என்றான்.

     அவ்உரைவிளம்பக் கேளா - சாரதி சொன்ன அந்தவார்த்தையைக்
கேட்டு; விடம் திரண்டு அனைய மெய்யான் - விடமே ஒரு அரக்க வடிவு
கொண்டாற் போன்றுள்ள  (கறுத்துள்ள) அக்ககுமாரன்; இடம் புகுந்து
இனைய செய்த -
(அவனை நோக்கி) நமது இருப்பிடம் வந்து இவ்வளவு
கொடுந் தொழில்களைச் செய்த; இதனொடும் சீற்றம் எஞ்சேன் - இந்தக்
குரங்கை அழிப்பதனோடு, எனது கோபத்தை விடமாட்டேன்; தொடர்ந்து
சென்று -
மேலும் தொடர்ந்து போய்; உலகம் மூன்றும் துருவினென் -
மூன்று உலகங்களிலும் குரங்குகள் எங்கே எங்கேயிருக்கிறது என்று
தேடியவனாய்; ஒழிவுறாமல் கடந்து பின் - சிறிதிடமும் விடாமல் முற்றும்
எல்லா இடங்களையும் கடந்து சென்ற பிறகு; குரங்கு என்று ஓதும்கருவையும்
-
இனிமேல் குரங்கு என்று சொல்லக் கூடிய கருப்பத்தில் கருத்தன்மையாக
உள்ள கர்ப்பத்தையும்கூட; களைவென் என்றான் - அழித்தொழிப்பேன்
என்று சபதம் கூறினான்.

     சாரதியின்சொல்லைக் கேட்ட அக்ககுமாரன், குரங்கின் இனத்தையே
பூண்டோடு ஒழிப்பதாகச் சபதம் செய்தான். விடம் திரண்டனைய என்னும்
உவமை நிறத்தாலும், தொழிலாலும் கொள்ளப்படும். கரனுக்கு உதவியாளராக
இருந்த வீரர்களை 'ஆலகாலம் திரண்டன்ன ஆக்கையர்' (2885) என
முன்னர்க் கூறியது நினையத் தக்கது.                          (23)