அரக்கர் படையோடுஅனுமன் பொருதல் 5691. | ஆர்த்துஎழுந்து அரக்கர் சேனை, அஞ்சனைக்கு உரிய குன்றைப் போர்த்தது;பொழிந்தது, அம்மா ! பொரு படைப் பருவ மாரி; வேர்த்தனர்திசை காப்பாளர்; சலித்தன விண்ணும் மண்ணும்; தார்த் தனிவீரன், தானும் தனிமையும், அவர்மேல் சார்ந்தான். |
அரக்கர் சேனை -அரக்கர்படைகள்; ஆர்த்து எழுந்து - ஆரவாரத்துடனே கிளம்பி; அஞ்சனைக்கு உரிய குன்றை - அஞ்சனையின் மகனாகிய குன்று போன்ற அனுமனை; போர்த்தது - சூழ்ந்து கொண்டு; பொருபடைப்பருவ மாரி பொழிந்தது - போர் செய்கின்ற ஆயுதங்களாகிய பருவகாலத்து மழையைச் சொரிந்தது; திசை காப்பாளர் - (அது கண்ட) எட்டுத்திக்குகளையும் காக்கின்ற தேவர்கள்; வேர்த்தனர் - (அச்சத்தால்) உடல் வெயர்த்துத் தவித்தனர்; விண்ணும் மண்ணும் சலித்தன - வானுலகும் நில உலகும் (பொருகினற் வேகத்தால்) அதிரலாயின; தார்த்தனி வீரன் - மாலையணிந்த ஒப்பற்ற வீரனான அனுமன்; தனிமையும் தானும் - தனிமையே தனக்குத் துணையாக; அவர்மேல் சார்ந்தான் - எதிர்ந்து வந்த அவ்வரக்கர் மீது போரிடச் சென்றான். அனுமனைக் குன்றுஎன்றதற்கேற்ப, அதன்மீது பருவ மழை பொழிந்தது எனப்பட்டது. அனுமன், ஒரு துணையும் இன்றிப் போருக்குச் சென்றான் என்பதைத் 'தானும் தனிமையும்' என்ற தொடர் காட்டுகின்றது. அனுமனை முற்றிலுமாக மறைத்துச் சூழ்ந்திருந்து பெருங்கூட்டத்தினராகிய அரக்கர்கள் மழை பொழிவதுபோல் ஆயுதங்களை அனுமன்மீது செலுத்துகிறார்கள்; இந்தக் கொடுமை கண்டு திக்குப் பாலகர் அஞ்சி வேர்த்தனர்; மண்ணும் விண்ணும் நிலை குலைந்தன ஆனால், தன்னந்தனியாகிய அனுமன் அஞ்சவில்லை, சலித்துத் தளரவில்லை. இந்த வியப்பினைக் கவிஞர் 'அம்மா' என்ற வியப்பிடைச் சொல்லால் சுட்டினார். (24) |