5694.

வரஉற்றார், வாராநின்றார், வந்தவர், வரம்பு இல்
                                வெம்போர்
பொர உற்றபொழுது, வீரன் மும் மடங்கு ஆற்றல்
                                பொங்க
எரியின் போய், கதிரோன் ஊழி இறுதியின் என்னல்
                           ஆனான்;
உரவுத் தோள்அரக்கர் எல்லாம், என்புஇலா
                           உயிர்கள் ஒத்தார்.

     வர உற்றார் -போர்க்களத்துக்கு வருதலைப் பொருந்தியோரும்; வாரா
நின்றார் -
வந்து கொண்டிருந்தோரும்; வந்தவர் - முன்னரே வந்து
சேர்ந்தோரும் ஆகிய அரக்க வீரர்கள் யாவரும்; வெம்போர் பொர உற்ற
பொழுது -
கொடிய போர் செய்ய முனைந்த போது; வீரன் - வீரனாகிய
அனுமன்; மும்மடங்கு ஆற்றல் பொங்க - இயல்பாகவுள்ள ஆற்றல் மூன்று
மடங்காகப் பெருக; எரியின் போய் - (ஊழித்) தீப் போல எதிரிகளை
நோக்கிச் சென்று; ஊழிக் கதிரோன் என்னல் ஆனான் - ஊழிக் காலத்து
எல்லாவற்றையும் எரித்தொழிக்கும் சூரியன் போன்றவனாக ஆனான்; உரவுத்
தோள் அரக்கர் எல்லாம் -
வலிமை மிக்க தோள் கொண்ட
அரக்கர்களெல்லாம்; என்பு இலா உயிர்கள் ஒத்தார் - எலும்பில்லாத
உயிர்களாகிய புழுக்களைப் போன்றவரானார்.

     அரக்கர் சேனைமுடிவே இல்லாத அணிவகுப்புடன் பெருகிவந்ததை வர
உற்றார், வாரா நின்றார், வந்தவர் என வருணித்தார், கவிச்சக்கரவர்த்தி.
முன்பே களம் வந்தவர், வந்துகொண்டிருப்பவர், வருவதற்குத் தயாராகி
முனைந்திருப்போர் ஆகிய மூன்று வகையினை முறையே வந்தவர், வாரா
நின்றார், வர உற்றார் என்ற சொற்களால் மதித்துணர்க. அத்துணைப்
படைகளையும் எரித்தொழிக்கும் ஆற்றலோடு சினத் தீ மும்மடங்கு பொங்கிடத்
தாக்குகிறான் அனுமன். ஊழிக் காலத்துச் சூரியன் முன் பிழைப்பது ஏதுமில்லை
என்பது உவமையின் குறிப்பு; ஊழிக் கதிரவன்முன் எஞ்சுவன ஏதுமில்லை;
மும்மடங்கு ஆற்றலோடு தாக்கும் அனுமன்முன் தப்பித்துப் போகும்
அரக்கரும் இல்லை. கதிரவன்முன் தாமே வலிய நெளிந்து சென்றும்
புழுக்களைப் போல அனுமன் முன் அத்துணை அரக்கரும் அழியப்
போகிறார்கள் என்பதை உய்த்துணர வைக்கும் உவமை நயம் பாராட்டத்தக்கது.
'என்பு இலதனை வெயில் போலக் காயுமே அன்பு இலதனை அறம்' (77) என்ற
குறள் கம்பர் நினைவிலே எழுந்ததன் விளைவு இச் செய்யுள். அக்குறட்பாவின்
உரையில், பரிமேலழகர், 'வெறுப்பின்றி எங்குமொரு தன்மைத்தாகிய வெயிலின்
முன் என்பில்லது தன் இயல்பாற்  சென்று கெடுமாறுபோல,
அத்தன்மைத்தாகிய அறத்தின்முன் 'அன்பில்லது' தன் இயல்பாற் சென்று
கெடும் என்பதாம்' என்று விளக்கிய உவமைத் திறம் காணத் தக்கது. அறத்தின்
தனிமை தீர்ப்பானாகிய அனுமன் இருக்கும் இடத்துக்கு அன்பின்
நீங்கினாராகிய அரக்கர்கள் தாமேவந்து அழிவைத் தேடுகின்றனர் என்பது
கவிச் சக்கரவர்த்தியின் குறிப்பு. ஒற்றுமை நயம் விரிக்கிற் பெருகும்.      27)