5697.

ஆழிப்பொரு படை நிருதப் பெரு வலி
     அடலோர்,ஆய்மகள் அடு பேழ் வாய்த்
தாழிப் படுதயிர் ஒத்தார்; மாருதி,
     தனி மத்துஎன்பது ஓர் தகை ஆனான்;
ஏழ் இப் புவனமும்மிடை வாழ் உயிர்களும்,
     எறி வேல்இளையவர் இனம் ஆக,
ஊழிப் பெயர்வதுஓர் புனல் ஒத்தார்; அனல்
     ஒத்தான்; மாருதம் ஒத்தானே.

     ஆழிப் பொருபடைநிருதப் பெருவலி அடலோர் - கடல் போன்று
கொந்தளித்துத் தாக்கும் சேனையில் உள்ள அரக்கர்களாகிய பெரிய வலிமை
வாய்ந்த வீரர்கள்; ஆய் மகள், அடு - ஆயர் குல மகள், பாலைக் காய்ச்சித்
தோய்த்து வைத்த; பேழ் வாய்த்தாழி படுதயிர் ஒத்தார் - அகன்றவாயை
உடைய மிடாவில் கடையப்படும் தயிர் போலக் குழைந்து வருந்தினர்; மாருதி
-
அனுமனோ; தனி மத்து என்பது ஓர் தகை ஆனான் - ஒப்பற்ற
மத்தென்று சொல்லத்தகுந்த தன்மையைப் பொருந்தினான்; எறிவேல்
இளையவர் -
எறிந்து தாக்கும் வேலை உடைய அரக்கரான இளவீரர்கள்;
இவ் ஏழ்புவனமும் -
இந்த ஏழு உலகங்களிலும்; மிடை வாழ் உயிர்களும் -நெருங்கிவாழ்கின்ற உயிர்கள் அனைத்தும்; இனம் ஆக - ஒன்றாகக் கூடின
போன்றிருக்க; ஊழிப் பெயர்வது ஓர் புனல் ஒத்தார் - (அவர்கள்) யுக
முடிவுக் காலத்தில் பொங்கி வரும் ஒரு பிரளய வெள்ளத்தை ஒத்து
விளங்கினர்; மாருதம் ஒத்தான் - (உடல் வலிமையில்) வாயு பகவானை
ஒத்தவனான அனுமன்; அனல் ஒத்தான் - (அந்த ஊழி வெள்ளத்தைப் பருகி
அழிக்கும் வடவாமுகாக்கினி என்னும்) ஊழித் தீயை ஒத்தான்.

     முதல் இரண்டுஅடிகளில் போர்க்களம் தயிர்த் தாழியாகவும்,
அக்களத்தில் அகப்பட்ட அரக்க வீரர்கள், தாழியில் உள்ள தயிராகவும்,
அனுமன் அத்தயிரைக் கடையும் மத்தாகவும் உருவகப்படுத்தியதாகும். பின்
இரண்டு அடிகளில் அரக்கர்கள் ஊழிப் பிரளயமாகவும், அனுமன் அதனை
நீக்கும் அனலாகவும் உருவகப்படுத்தப்பட்டனர்.                    (30)