5699.

உற்றான்இந்திரசித்துக்கு இளையவன்;
     ஒரு நாளேபலர் உயிர் உண்ணக்
கற்றானும் முகம்எதிர் வைத்தான்; அது
     கண்டார்விண்ணவர்; கசிவுற்றார்;
'எற்றாம் மாருதி நிலை ?' என்பார்; இனி
     'இமையாவிழியினை இவை ஒன்றோ
பெற்றாம்;நல்லது பெற்றாம்' என்றனர்;
     பிறியாது எதிர் எதிர் செறிகின்றார்.

     இந்திரசித்துக்கு இளையவன் உற்றான் - இந்திரசித்தனுக்குத்
தம்பியாகிய அந்த அக்ககுமாரனும் (அனுமனுக்கு) எதிரே வந்தடைந்தான்; ஒரு
நாளே பலர் உயிர் உண்ணக் கற்றானும் -
ஒரு நாளிலேயே பல
லட்சக்கணக்கான வீரர் உயிர்களை அழிக்கப் பழகியவனான அனுமனும்;
முகம் எதிர் வைத்தான் - அவனுக்கு எதிர்முகமாய் நின்றான்; அது
கண்டார் விண்ணவர் -
அந்நிலையைக் கண்ட தேவர்கள்; கசிவு உற்றார் -
மனம் இரங்கியவர்களாய்; மாருதி நிலை எற்றாம் - (இனி) அனுமனுடைய
நிலை யாது ஆகுமோ; என்பார் - என்று மனத்தில் துணுக்குக் கொண்டு
கூறுபவர்களாய்; இனி - இப்பொழுது; இமையா விழியினை இவை ஒன்றோ
பெற்றாம் -
இமையாக்கண்களை உடைமையாகிற இந்த ஒரு சிறப்பைப்
பெற்றிருக்கின்ற நாங்கள்;
 நல்லது பெற்றாம் -(இவ்விருவரும் பொருகின்ற
போர் விநோதத்தைக் காணுமாறு) நன்மையைப் பெற்றவரானோம்; என்றனர் -
என்று கூறுபவர்களாய்; பிறியாது எதிர் எதிர் செறிகின்றார் - (ஒருவரை
விட்டு ஒருவர்) பிரியாமல் (அப்போரைக் காணும் பொருட்டு வானத்தில்) எதிர்
எதிராகப் போய் நின்றார்கள்.

     போரை இடையீடின்றிக் காணுதற்குக் கண் இமையாமல் இருத்தல்
வாய்ப்பு ஆயிற்று ஆதலின் மகிழ்ச்சி விளைந்தது.                  (32)