அனுமனோடு மற்போர்செய்து அக்ககுமாரன் மடிதல் 

5703.

வாளாலே பொரல் உற்றான், இற்று அது
     மண்சேராமுனம், வயிரத் திண்
தோளாலே பொரமுடுகிப் புக்கு, இடை
     தழுவிக்கோடலும், உடல் முற்றும்,
நீள் ஆர் அயில்என மயிர் தைத்திட, மணி
     நெடு வால்அவன் உடல் நிமிர்வுற்று
மீளாவகை, புடைசுற்றிக்கொண்டது;
     பற்றிக்கொண்டன் மேலானான்.

     வாளாலே பொரல்உற்றான் - வாள் கொண்டு போர்புரியத்
தொடங்கிய அக்ககுமாரன்; அது இற்று மண் சேரா முனம் - அந்த வாள்
ஒடிந்து தரையில் விழுவதற்கு முன்னம்; வயிரத்திண் தோளாலே பொர
முடுகி -
மிக்க வலிய தனது தோளினாலேயே போர் புரிய வேகமாக வந்து;
இடை புக்கு தழுவிக் கோடலும்  -
அவ்விடம் புகுந்து அனுமனைத் தழுவிக்
கொள்ள முயன்றபோது; உடல் முற்றும் - அக்ககுமாரனது உடல் முழுவதும்;
நீள் ஆர் அயில் என மயிர் தைத்திட -
நீட்சி பொருந்திய வேலாயுதம்
போல (அனுமனது) உரோமங்கள் குத்தி உட்புக; மணி நெடு வால் -
அனுமனுடைய அழகியநீண்டவால்; அவன் உடல் நிமிர் உற்று மீளாவகை
-
அந்த அக்ககுமாரனுடைய உடல் மேற்கிளம்பி மீளாதபடி; புடை சுற்றிக்
கொண்டது -
உடலின் எப்புறங்களிலும் சுற்றிப் பிணித்துக் கொண்டது; பற்றிக்கொண்டனன் - இவ்வாறு பற்றிக் கொண்ட அனுமன்; மேல்
ஆனான் -
(அவ்வரக்கனைக் கீழே தள்ளி அவன்) மேலே எழுந்து
உட்கார்ந்துகொண்டான்.                                      (36)