5705. | நீத்து ஆய்ஓடின உதிரப் பெரு நதி நீராக,சிலை பாராக, போய்த்தாழ் செறி தசை அரி சிந்தினபடி பொங்க,பொரும் உயிர் போகமுன், மீத் தாம்நிமிர் சுடர் வயிரக் கைகொடு பிடியா,விண்ணொடு மண் காண, தேய்த்தான்-ஊழியின் உலகு ஏழ் தேயினும், ஒரு தன்புகழ் இறை தேயாதான். |
நீத்து ஆய் ஓடினஉதிரப் பெரு நதி நீராக - (அப்போது) வெள்ளமாகப் பெருகிய இரத்தப்பெரு நதியே (அரைக்கும் போது விடும்) நீராகவும்; பார் சிலை ஆக - பொருகளமே (பூமியே) அரைக்கும் அம்மிக்கல்லாகவும்; போய்த் தாழ் செறி தசை - அத்தரையில் போய் விழுந்த (அக்ககுமாரனது) நெருங்கிய தசையே; அரி சிந்தின படி பொங்க - ஊறல் அரிசிகள் சிந்திக் கிடப்பனபோல மிகுந்து விளங்கவும்; பொரும் உயிர் போகாமுன் - (அரக்கனது உடற்பகுதியைக் குழவியாகக் கொண்டு) போர் செய்கின்ற அரக்கன் உயிர் போகாமுன்னம்; மீத்தாம் நிமிர் - மேலாக எழுந்து ஓங்கிய; சுடர் வயிரக்கை கொடு பிடியா - ஒளிதங்கிய உறுதியான தன் இருகைகளைக் கொண்டு (குழவியின் இருபுறத்து) பிடித்து; விண்ணொடு மண்ணும் காண - மேலுலகத்தாரும் நில உலகத்தாரும் காணும்படி; ஊழியின் - யுக முடிவில்; உலகு ஏழ்தேயினும் - ஏழு உலகங்களும் அழிந்தாலும்; ஒரு தன் புகழ் இறை தேயாதான் - ஒப்பற்ற தன் புகழில் சிறிதும் குறையாது விளங்கும் அனுமன்; தேய்த்தான் - அரைத்து உருவில்லாமல் சேறாக்கினான். தேயாதான்,தேய்த்தான் என்பது முரண் தொடர் அழகு. அரி சிந்தினபடி; அரைக்கும் போது, அதிர்ச்சியால் அம்மியில் உள்ள அரிசிகள் சிந்துவன, போல, அரக்கன் உடலிலிருந்து தசைத்துண்டுகள் சிந்திப் புறங்களில் விழுந்து கிடந்தன என்பதாம். (30) |