எஞ்சிய படைகள்அஞ்சி ஓடி மறைதல்

 5706.

புண் தாழ்குருதியின் வெள்ளத்து, உயிர் கொடு
     புக்கார் சிலர்; சிலர் பொதி பேயின்
பண்டாரத்திடைஇட்டார் தம் உடல்;
     பட்டார்சிலர்; சிலர் பயம் உந்த,
திண்டாடித் திசைஅறியா மறுகினர்;
     செற்றார்சிலர்; சிலர் செலவு அற்றார்;
கண்டார் கண்டது ஓர் திசையே விசைகொடு
     கால்விட்டார்; படை கைவிட்டார்.

     சிலர் புண்தாழ்குருதியின் வெள்ளத்து உயிர் கொடு புக்கார் -
(உயிர்எஞ்சிய அரக்கரில்) சிலர், புண்களிலிருந்து பெருகுகின்ற இரத்த
வெள்ளத்தினுள் உயிரோடு புகுந்து ஒளிந்து கொண்டனர்; சிலர் பேயின்
பொதிபண்டாரத்திடைத் தம் உடல் இட்டார் -
மற்றும் சிலர், பேய்களால்
சேர்த்துவைக்கப்பட்ட பிணங்கள் நிறைந்த குவியலினிடத்து (போய்ப்புகுந்து)
தமது உடலை இட்டு மறைத்துக் கொண்டனர்; சிலர், பயம் உந்த பட்டார் -
வேறு சில அரக்கர்க்ள அச்சம் முன் பிடித்துத்தள்ள இறந்து ஒழிந்தனர்; சிலர்,
திண்டாடித் திசை அறியாமறுகினர், செற்றார் -
மற்றும் சிலர்,
அலைக்கல்பட்டுத் திக்குத் தெரியாமல் கலங்கினவராய் வலியொடுங்கினார்கள்;
சிலர் செலவு அற்றார் -
வேறு சிலர், எங்கும் செல்லும் வலிமை
அற்றவர்களானார்கள்; சிலர் படைகைவிட்டார் - வேறு சிலர் தம்
கையிலிருந்த ஆயுதங்களை நழுவவிட்டவர்களாய்; கண்டார் கண்டது ஓர்
திசையே -
அவரவர் எதிரே கண்ட கண்ட திசை நோக்கியே; விசை கொடு
கால் விட்டார் -
வேகமாக ஓட்டம் பிடித்தனர்.

     புறம் கொடுத்துஓடியவர்களின் செயலுள் சில கூறப்பட்டன. கைவிட்டார்
கால் விட்டார் என்பன மரபுச் சொற்கள்.                           (39)