5707. | மீன் ஆய்,வேலையை உற்றார் சிலர்; சிலர் பசு ஆய்வழிதொறும் மேய்வுற்றார்; ஊன் ஆர்பறவையின் வடிவு ஆனார் சிலர்; சிலர்நான்மறையவர் உரு ஆனார்; மான் ஆர் கண்இள மடவார் ஆயினர் முன்னே, தம் குழல் வகிர்வுற்றார் ஆனார் சிலர்;சிலர், 'ஐயா ! நின் சரண்' என்றார்;நின்றவர் 'அரி' என்றார். |
சிலர் மீன் ஆய்வேலையை உற்றார் - சில அரக்கர்கள் மீன் உருவம் கொண்டு கடலில் சேர்ந்தனர்; சிலர், பசு ஆய் வழிதொறும் மேய்வுற்றார் - சிலர் பசுவின் வடிவில் மாறி வழிகளில் எல்லாம் மேய்வாராயினர்; சிலர் ஊன் ஆர் பறவையின் வடிவு ஆனார் - சில அரக்கர்கள், மாமிசத்தைத்தின்னும் (கழுகு, காகம் முதலிய) பறவைகளின் வடிவை உடையவரானார்கள்; சிலர் நான் மறையவர் உரு ஆனார் - வேறு சிலஅரக்கர்கள் நான்கு வேதங்களை ஓதும் அந்தணர் உருவை எடுத்துக் கொண்டனர்; சிலர் - மற்றும் சில அரக்கர்கள்; மான் ஆர் கண் இள மடவார் ஆயினர் - மான்போன்ற கண்களை உடைய இளமகளிர் உருவைப் பெற்றவராய்; தம் குழல் முன்னே வகிர்வு உற்றார் ஆனார் - தம்கூந்தலை முன்புறம் வகிடு எடுத்துக் கொண்டவர் ஆயினர்; சிலர், 'ஐயா, நின்சரண் என்றனர் - வேறுசிலர், 'ஐயனே ! யாம் உன் அடைக்கலம் என்றார்கள்; நின்றவர் அரி என்றார் - மற்றுமுள்ளோர் அரி என்ற திருமால் திருநாமத்தைக் கூறினர். அனுமனுக்குஅஞ்சித் தம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியில் அரக்கர்கள் செய்த மாயச் செயல்கள் கூறப்பட்டன. அரி - குரங்கு என்றும் பொருள் - குரங்கு என்றது அச்சத்தில் கூறியதாம் - அது திருமால் நாமமாகக் கருதப்பட்டு உயிர் பெற்றார். (40) |