5708. | தம்தாரமும், உறு கிளையும், தமை எதிர் தழுவும்தொறும், 'நும தமர் அல்லேம்; வந்தேம்,வானவர்' என்று, ஏகினர் சிலர்; சிலர்,'மானுயர்' என, வாய் விட்டார்; மந்தாரம் கிளர்பொழில்வாய் வண்டுகள் ஆனால்சிலர்; சிலர் மருள்கொண்டார்; இந்து ஆர்எயிறுகள் இறுவித்தார் சிலர்; எரிபோல்குஞ்சியை இருள்வித்தார். |
சிலர்,தம்தாரமும், உறு கிளையும் தமை எதிர் தழுவும் தொறும் - சிலஅரக்கர்கள் தமது மனைவிகளும் நெருங்கிய உறவினர்களும் தம்மைக் (கண்ட மகிழ்ச்சியால்) எதிர் வந்து தழுவிக் கொண்ட போதெல்லாம்; நுமதமர் அல்லோம் - யாங்கள் உமது சுற்றத்தினர் அல்லோம்; வானவர் வந்தோம் -நாங்கள் தேவர்கள், இப்போரைக் காண இங்கே வந்தோம்; என்று ஏகினர் -என்று சொல்லிவிட்டு அப்பால் சென்றனர்; சிலர், மானுயர் என வாய் விட்டார் - வேறு சிலர், நாங்கள் மானிடர் (அரக்கர் அல்லர்) என்று பெருங்கூக்குரலிட்டனர்; சிலர் - வேறு சிலர்; மந்தாரம் கிளர் பொழில் வாய்வண்டுகள் ஆனார் - மந்தார மரங்கள் விளங்கும் அந்தச் சோலையினிடத்துவண்டுகளின் வடிவினை எடுத்துக் கொண்டார்; சிலர் மருள் கொண்டார் -இன்னும் சிலர், செய்வது இன்னதென்று அறியாமல் மயங்கி நின்றனர்; சிலர்இந்து ஆர் எயிறுகள் இறுவித்தார்- வேறுசில அரக்கர்கள் பிறைச்சந்திரன் போன்று வளைந்த தம் பற்களை ஒடித்துக் கொண்டனர்; எரிபோல் குஞ்சியை இருள் வித்தார் - நெருப்புச் சுடர் போன்று சிவந்த தமது தலைமயிரை இருள் போலக் கறுப்பாக்கிக் கொண்டனர். அனுமனுக்கு அஞ்சியஅரக்கர்கள் தம்மை மாற்றிக் கொண்ட சில செயல்களும் சில சொற்களும் கூறப்பட்டன. கோரைப் பற்கள் தங்களை அரக்கர் என அடையாளம் காட்டிவிடுமே என அஞ்சி அவற்றை ஒடித்துக் கொண்டனராம். அவ்வாறே செந்நிற முடியைக் கருநிறமாக்கி அரக்கத் தோற்றத்தை மாற்றிக் கொண்டனர் என்கிறார் தோல்வியால் வீரத்துக்கு இழுக்கு தேடிக்கொண்டதோடு உயிர்மீது ஆசை வைத்து, எப்படியாவது தப்பவேண்டுமே என்று பல்வேறு பொய்க் கோலமும் பொய்ம் மொழிகளும் கொண்டு கோழைகளாயினர் என்பதாம். மகளிர் முடியைக் கூந்தல் என்றும் ஆடவர் முடியைக் குஞ்சி என்றும் சொல்லுதல் மரபு. (41) |