அரக்கிமாரின் அவலநிலை கலிவிருத்தம் 5709. | குண்டலக்குழை முகக் குங்குமக் கொங்கையார், வண்டு அலைத்து எழுகுழல் கற்றை கால் வருடவே, விண்டு, அலத்தக விரைக் குமுத வாய் விரிதலால், அண்டம் உற்றுளது,அவ் ஊர் அழுத பேர் அமலையே ! |
குண்டலக் குழைமுகம் - குண்டலம் என்னும் காதணி அணிந்த செவியை உடைய முகத்தையும்; குங்குமக் கொங்கையார் - குங்குமக் குழம்பு பூசப் பெற்ற மார்பகங்களையும் உடைய அரக்கமகளிர்கள்; வண்டு அலைத்து எழுகுழல் கற்றை - வண்டுகளை அலையச் செய்து மேல் எழும்பப் பெற்ற தமது கூந்தல் தொகுதி; கால் வருட - (அவிழ்ந்து) கால்களிலே விழுந்து புரண்டு கொண்டிருக்க; அலத்தக விரைக் குமுத வாய் விண்டு விரிதலால் -செம்பஞ்சு ஊட்டப் பெற்றதும், வாசனை உடையதும், குமுதமலர் போன்றதுமான வாய்கள் திறந்து விரிவடைதலால்; அவ் ஊர் அழுத பேர் அமலை - அந்த இலங்கை நகரத்தார் அழுத பெரும் ஓசை; அண்டம் உற்றுளது - மேலுலகம் வரை எட்டிற்று. அரக்கிமார்கள்தமது கூந்தல் காலில் விழும்படி, விரித்துக் கொண்டு வாய்திறந்து பேரொலி எழுப்பி அழுதனர் என்பதாம். அலத்தகம் - செம்பஞ்சு; வாய்க்கும் செம் பஞ்சு பூசப் பெறுவது உண்டு 'அம்மலாடியும் கையும் மணி கிளர் பவழவாயும்.... அலத்தகம் எழுதி விட்டாள்' (சீவக. 2446) குண்டலக் குழை - குண்டலமாகிய குழை என இருபெயரொட்டாயிற்று. (42) |