5710. | கதிர்எழுந்தனைய செந் திரு முகக் கணவன்மார் எதிர் எழுந்து,அடி விழுந்து, அழுது சோர் இள நலார் அதி நலம் கோதைசேர் ஓதியோடு, அன்று, அவ் ஊர் உதிரமும்தெரிகிலாது, இடை பரந்து ஒழுகியே ! |
கதிர் எழுந்துஅனைய செம்திருமுகக் கணவன்மார் - சூரியன் உதித்தது போன்ற சிவந்த அழகிய முகங்களை உடைய (இறந்த) தமது கணவன்மார்; எதிர் எழுந்து அடி விழுந்து - முன்னே எழுந்து போய் கால்களில் விழுந்து; அழுது சோர் இள நலார் - அழுது சோர்கின்ற இளம் பெண்களுடைய; அதிநலம் கோதை சேர் ஒதியோடு - மிக்க அழகுள்ள மாலையை அணிந்த கூந்தலுடனே; அன்று அவ்ஊர் உதிரமும் - அப்பொழுது அந்த ஊரில், பெருகுகின்ற இரத்தமும்; பரந்து ஒழுகி - பரவிப் பெருகி; இடை தெரிகிலாது - வேற்றுமை அறிய முடியாதபடி ஆயிற்று. இளநலார் ஓதியும்(கூந்தலும்) இரத்தமும் செந்நிறமாக இருத்தலால் வேற்றுமை தெரியாததாயிற்று. இடை - வேற்றுமை. கோதை - மாலை. ஓதி - மகளிர் முடி. (43) |