ஏந்தினாள்தலையை, ஓர் எழுத அருங் கொம்பு அனாள்; காந்தன் நின்றுஆடுவான் உயர் கவந்தத்தினை, 'வேந்த ! நீஅலசினாய்; விடுதியால் நடம்' எனா, பூந் தளிர்க்கைகளான், மெய் உறப் புல்லினாள்.
ஓர் எழுத அரும்கொம்பு அனாள் - சித்திரத்தில் எழுதமுடியாத மிக்க அழகுள்ள பூங்கொம்பு போன்ற ஒரு அரக்கர்மகள்; தலையை ஏந்தினாள் - (இறந்த கணவனது) தலையைக் கையில் ஏந்திக் கொண்டு; நின்று ஆடுவான் காந்தன் உயர் கவந்தத் தினை - நின்று கூத்தாடுகின்ற தன் கணவனது உயர்ந்த உடல் குறையினைப் பார்த்து; 'வேந்த ! நீ அலசினாய் - கணவனே ! நீ வெகு நேரம் ஆடியதால் இளைத்து விட்டாய்; நடம் விடுதியால் - கூத்தாடுதலைவிடுவாய்; எனா - என்று சொல்லி; பூந்தளிர் கைகளால் - மலரையும் தளிரையும் போன்ற தனது கைகளால்; மெய் உறப் புல்லினாள் - (அரக்கனுடைய) உடலை இறுகத் தழுவிக் கொண்டாள்.
முன் செய்யுளின்கற்பனை மேலும் விரிந்து பேரவல வீரத்தைப் புலப்படுத்திற்று. (47)