5718. | அரம் சுடர்வேல் தனது அனுசன் இற்ற சொல் உரம் சுட, எரிஉயிர்த்து, ஒருவன் ஓங்கினான்- புரம் சுட வரிசிலைப் பொருப்பு வாங்கிய பரஞ்சுடர்ஒருவனைப் பொருவும் பான்மையான். |
ஒருவன் - ஒப்பற்றவனானஇந்திரசித்து; அரம் சுடர் வேல் - அரத்தினால் அராவி ஒளி வீசப்பெற்ற வேலாயுதத்தை உடைய; தனது அனுசன் - தனது தம்பியாகிய அக்கன்; இற்றசொல் உரம் சுட -இறந்தான் என்ற வார்த்தை தனது மனத்தை எரித்தலால்; எரி உயிர்த்து- நெருப்புச் சுடர் போலப் பெருமூச்சு விட்டுக் கொண்டு; புரம் சுட வரிசிலைப் பொருப்பு வாங்கிய - முப்புரத்தை எரிப்பதற்கு கட்டமைந்த வில்லாகமேரு மலையை வளைத்த; பரம் சுடர் ஒருவனை - மேலான சோதி வடிவினனான சிவபிரானை; பொருவும் பான்மையான் - ஒக்கின்ற தன்மை உடையவனாய்; ஓங்கினான் - போருக்கு எழுந்தான். அனுசன் -தம்பி. (2) |