அறுசீர் ஆசிரியவிருத்தம்

5720.

ஆர்த்தன,கழலும் தாரும் பேரியும், அசனி அஞ்ச;
வேர்த்து, உயிர்குலைய, மேனி வெதும்பினன்,
                           அமரர் வேந்தன்;
'சீர்த்ததுபோரும்' என்னா, தேவர்க்கும் தேவர் ஆய
மூர்த்திகள்தாமும், தம்தம் யோகத்தின் முயற்சி
                           விட்டார்.

     கழலும் தாரும்பேரியும் - இந்திரசித்துஅணிந்திருந்த வீரக்
கழல்களும் மாலைகளும் (அவனுடன் சென்ற) முரசங்களும்; அசனி அஞ்ச
ஆர்த்தன -
இடியும் அஞ்சிப் பின்னிடும்படி மிகுதியாக ஒலித்தன.
(அம்முழக்கம் கேட்டு); அமரர் வேந்தன் உயிர்குலைய மேனி வேர்த்து
வெதும்பினன் -
தேவர் தலைவனான  இந்திரன் உயிர் நடுங்க உடல்
வியர்த்து அச்சத்தால் வெதும்பி வருந்தினான்; தேவர்க்கும் தேவர் ஆய
மூர்த்திகள் தாமும் -
எல்லாத் தேவர்க்கும் தலைமைத் தேவர்களான
மும்மூர்த்திகளும்; போரும் சீர்த்தது என்னா - போர் உச்சநிலை அடைந்ததுஎன்று; தம்தம் யோகத்தின் முயற்சி விட்டார் - அவரவர்
செய்தொழிலின்(படைத்தல், காத்தல், அழித்தல்) முயற்சியைக் கைவிட்டார்கள்.

     மேகநாதன்போருக்குப் புறப்பட்டதைக் கண்ட, இந்திரன், மும்மூர்த்திகள்
முதலாயோர் நிலை கூறப்பட்டது.                                (4)