இந்திரசித்தைச் சூழ்ந்த படைகளின் பெருக்கம்

5722.

வேல்திரண்டனவும், வில்லு மிடைந்தவும், வெற்பு
                                 என்றாலும்
கூறு இரண்டுஆக்கும் வாள் கைக் குழுவையும்
                         குணிக்கல் ஆற்றேம்;
சேறு இரண்டு அருகுசெய்யும் செறி மதச் சிறு
                         கண் யானை,
ஆறு-இரண்டுஅஞ்சுநூற்றின் இரட்டி; தேர்த்
                         தொகையும் அஃதே.

     வெற்பு என்றாலும்- மலைஎதிர்த்துள்ளது என்றாலும்; கூறு இரண்டு
ஆக்கும் -
அதனை இரு கூறாகப் பளிக்கக்கூடிய; வேல் திரண்டனவும் -
வேல் வீரர்கள் படைதிரண்டு வந்தவையும்; வில்லுமிடைந்தவும் -
வில்லாளிகளாக நெருங்கி வந்தவையும்; வாள்கை குழுவையும் - வாள்
ஏந்திய கையை உடைய படைகளின் கூட்டத்தையும்; குணிக்கல் ஆற்றேம் -
இவ்வளவு என்று கண்க்கிட்டுக் கூறும் வலிமை உடையோம் அல்லேம்;
இரண்டு அருகு சேறு செய்யும் செறிமதம் -
இருபுறத்திலும் நிலத்தைச்
சேறாக்கும் மதநீர்ப் பெருக்கையும்; சிறுகண் யானை - சிறிய கண்களையும்
உடைய யானைகளின் தொகை; ஆறு இரண்டு அஞ்சு நூற்றின் இரட்டி -
ஆறாயிரத்தின் இருமடங்கான பன்னீராயிரம்; தேர்த் தொகையும் அஃதே -
தேர்ப் படைகளின் தொகையும் அவ்வளவே (பன்னீராயிரம்)

     கவிக்கூற்றுவேல், வில், வாள் ஏந்திய வீரர்கள் கணக்கிட
முடியாதவர்கள். யானை, தேர்ப்படைகள் ஒவ்வொன்றும் பன்னீராயிரம் ஆகும்.
                                                           (6)