5727.

'திக்கயவலியும், மேல்நாள் திரிபுரம் தீயச் செற்ற
முக்கணன்கைலையோடும் உலகு ஒரு மூன்றும்
                               வென்றாய்;
"அக்கனைக்கொன்று நின்ற குரங்கினை, ஆற்றல்
                                காண்டி;
புக்கு இனிவென்றும்" என்றால், புலம்பு அன்றி,
                     புலமைத்து ஆமோ ?

     திக்கய வலியும்- எட்டுத்திக்கு யானைகளின் வலிமையையும்;
மேல்நாள் திரிபுரம் தீயச் செற்ற முக்கணான் கயிலையோடும் -
முன்னொரு காலத்தில் முப்புரத்தையும் எரியும்படி அழித்திட்ட சிவபிரானது
கைலை மலையையும்; உலகு ஒரு மூன்றும் வென்றாய் - மூன்று
உலகங்களையும் வென்றவனாகிய நீ (இப்போது); அக்கனைக் கொன்று நின்ற
குரங்கினை -
அக்ககுமாரனைக் கொன்று (தான் உயிரோடு) நின்ற இந்தக்
குரங்கை; ஆற்றல் காண்டி - அதன் ஆற்றல் காண்பிக்குமாறு பார்த்துக்
கொண்டிருக்கிறாய் (விளையாடவிட்டு வேடிக்கை பார்க்கிறாய்); இனிப்புக்கு
வென்றும் என்றால் -
இவ்வளவு அழிவுக்குப் பின் நாம் போர்க்களம் சென்று
அதனை வெல்வோம் என்று சொன்னால்; புலம்பு அன்றி - அது
வீண்பிதற்றலே அல்லாமல்; புலமைத்து ஆமோ ? - அறிவுடைய
செயலாகுமோ (ஆகாது என்றபடி).

    ஆடவிட்டு நாடகம்பார்ப்பது போல செய்து விட்டாய். இனி
அக்குரங்கை நாம் வென்றாலும் நமக்குப் புகழ் இல்லை என்பது கருத்து.                                                   (11)