5735. | அரம்தெறும் அயிலின் காடும், அழல் உமிழ் குந்தக் காடும், சரம் தருசிலையின் காடும், தானவர் கடலும், இன்ன நிரந்தரம் சங்குதாரை நில மகள் முதுகை ஆற்றாள்; 'புரந்தரசித்துவந்தான்' என்றன, பொன்னின் சின்னம்.* |
அரம் தெறும்அயிலின் காடும் - அரத்தால் தீட்டிக்கூர்மை செய்யப்பெற்ற வேற்படைத் தொகுதியும்; அழல் உமிழ் குந்தக்காடும் - நெருப்பைக் கக்குகின்ற குந்தப் (ஈட்டி) படையின் மிகுதியும்; கரம் தரு சிலையின் காடும் - அம்புகளை எய்கின்ற விற்படைப்பெருக்கமும்; தானவர் கடலும் - (இவற்றை எறிந்து, வீசி, எய்கின்ற) அரக்கர் திரளும்; இன்ன - மற்றும் இது போன்றனவும்; நிரந்தரம் - எப்பொழுதும் ஓயாது ஒலிக்கும்; சங்கு தாரை - சங்கு, தாரை போன்ற வாத்தியங்களும் சேர்தலினால்; நிலமகள் முதுகை ஆற்றாள் - பூதேவி பாரம் சுமக்கத் தன் முதுகு ஆற்றாதவள் ஆனாள் (இவ்வாறு பூதேவி வருந்தும்படி); புரந்தர சித்து - இந்திரசித்து; வந்தான் - போர்க்கு வந்தான்; என்றன பொன்னின் சின்னம் - என்று பொற்சின்னங்கள் இயம்பின. 'முதுகை ஆற்றாள்'என்பதுவரை படைப்பெருக்கு கண்ட கலியின் கூற்றாக ஆகி இறுதி அடிமட்டும் சின்னம் கூறுவதாக ஆக்கலும் ஒன்று. புரந்தரன் - இந்திரன்; இந்திரசித்து புரந்தர சித்து எனப்பட்டான். (19) |