5744. | வெள்ளம் ஓர் நூறுடை விற் படை என்பார்; துள்ளிய வாட்படை சொல்லிட ஒண்ணா, பொள்ளல் தரும் கரப் பூட்கையும் அஃதே;- கள்ள அரக்கனைச்சுற்றினர் காப்பார்.* |
கள்ள அரக்கனைச்சுற்றினர் காப்பார் - வஞ்சம் நிரம்பிய இந்திரசித்துவைச் சுற்றிப் பாதுகாப்பவர்; விற்படை ஓர் நூறுடை வெள்ளம் என்பார் - வில்லேந்திய படைஓர் ஒரு நூறு வெள்ளம் எனும் கணக்கினர் ஆவர்; துள்ளிய வாட்படை சொல்லிட ஒண்ணா - துள்ளிப் பாயும் வாள் ஏந்திய படைஞர் கணக்கிட முடியாதவராம்; பொள்ளல் தரும் கரப் பூட்கையும் அஃது - துவாரம் உடைய துதிக்கையை உடைய யானைப் படையும் அதுபோலவே சொல்ல இயலாத அளவினவாகும். முகத்திற்பூட்டியது போன்ற கையை உடைமையால் யானைக்குப் பூட்கை என்பது பெயர். 'ஏ' காரம் அசை. (28) |