5745. | ஆய பெரும்படை செல்வது கண்டு மாயம் மிகும்திறல் வானர வீரன், நாயகனைத் திசைநோக்கி வணங்கி, மேயது ஓர்இன்பம் விளங்கிட நின்றான்.* |
ஆய பெரும்படைசெல்வது கண்டு - அத்தகைய இந்திரசித்துவின் பெரியபடை செல்வதைப் பார்த்து; மாயம் மிகும் திறல் வானர வீரன் - பகைவர்க்கு மயக்கம் உண்டாக்கத்தக்க மிகுந்த வலி படைத்த குரங்கு வீரன் ஆய அனுமன்; நாயகரைத் திசை நோக்கி வணங்கி - இராமபிரானை (அவன் உள்ள) வடதிசை நோக்கி வணங்கி; மேயது ஓர் இன்பம் விளங்கிட நின்றான் - தன்னிடத்தில் உண்டாகிய மகிழ்ச்சி முகத்தில் விளங்கித் தோன்ற நின்றான். வஞ்சனைப்போர்செய்தல் அரக்கர் இயல்பு; அனுமனுக்கு இயல்பன்று ஆதலின், அனுமனின் வீரப் போர் கண்டு அரக்கர்க்கு மாயம் போல் உள்ளது என்று நினைக்குமாறு செய்யும் திறல் என உரைக்கப் பெற்றது. அனுமனின் இராம பக்தி இங்கே தோன்றுகிறது. தன் ஆற்றலினும் இராமபத்தியே தனக்கு வெற்றி தருவது என்பதை உணர்ந்தவன் அனுமன். (29) |