5752. | ஊழி எழுந்துஉலகத்தை ஒடுக்க, ஆழ் இயல் தானைஅரக்கர் அடங்க, ஏழ் உலகும் இடம்இல்லை எனும்படி ஆழி கிளர்ந்தனஎன்ன அழைத்தான்.* |
ஆழ் இயல் தானைஅரக்கர் அடங்க - ஆழும் இயல்பினை உடைய சேனையாகிய அரக்கர் முழுவதும்; ஏழ் உலகும் இடம் இல்லை எனும்படி - ஏழ்உலகங்களும் இடம் இல்லை என்று சொல்லும்படி; ஊழி எழுந்து உலகத்தை ஒடுக்க - ஊழிக் காலத்தே புறப்பட்டு உலகத்தை இல்லையாம்படிச் செய்ய; ஆழி கிளர்ந்தன என்ன - கடல் பொங்கிப் புறப்பட்டது போல மேலே கிளம்ப; அழைத்தான் - (அச் சேனைகளைப் போர்க்கு அறைகூவி அனுமன்) அழைத்தான். 'ஆழும் இயல்பினைஉடைய' என்றது ஒருவரே தாம் நின்ற நிலத்தை ஆழச் செய்யும் இயல்பினை உடையர் அரக்கர் என்பது பற்றி. (36) |